திடீரென டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் 'தமிழ்நாடு' ஹேஷ்டேக்.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Friday,January 06 2023]
நேற்று மாலை முதல் டுவிட்டரில் திடீரென ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டி ஆகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் காசி தமிழ் சங்க நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தபோது அதில் கவர்னர் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா என்ற நாடு இருக்கும் போது அதற்குள் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தேவையா? என்றும் தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா முழுவதும் ஒரு திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் பேசினார். இந்தியாவில் தமிழகம் என்பது மிகவும் புனிதமானது என்றும் இந்தியாவிற்கே வழி நடத்தக்கூடிய அளவுக்கு தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு’ என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று கூற வேண்டும் என்று கவர்னர் ஆர்.என் ரவி பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் டிஆர் பாலு எம்பி, அமைச்சர் உதயநிதி, மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்பட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் டுவிட்டரிலும் ஏராளமான நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
‘தமிழ்நாடு’ என்ற பெயரை பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் கொண்டு வந்த வரலாற்று சிறப்புமிக்க பெயர் என்றும் ’செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்று நமது பாரதியார் கூறியுள்ள பெயர் என்றும் அப்படிப்பட்ட ‘தமிழ்நாடு’ என்ற பெயரை கவர்னர் எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுதந்திரத்திற்குப் பின்னர் மெட்ராஸ் என்று மாநிலத்தின் பெயர் இருந்த நிலையில் அதை ‘தமிழ்நாடு’ என்ற மாற்றுவதற்கு அப்போதைய முதல்வர் அண்ணா கடும் முயற்சி செய்தது ஆளுநர் ரவிக்குத் தெரியாது என்று தெரியாது என்றும் அவர் வட இந்தியாவின் ஆதிக்கத்திற்கு ஒரு அடையாளம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
‘தமிழ்நாடு’ என்று தான் எங்கள் மாநிலத்தை அழைப்போம் என்றும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றாலும் ‘தமிழ்நாடு’ என்பது தனிச்சிறப்பு மிக்கது என்றும் தமிழர்களின் பூமிதான் ‘தமிழ்நாடு’ என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாதுரையே இந்த நாட்டை ஆள்கிறார்!#தமிழ்நாடு வாழ்க! pic.twitter.com/OBK8KwGRBf
— DMK IT WING (@DMKITwing) January 5, 2023