தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் புதிய தொழில் நிறுவனங்கள்… முதல்வரின் அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் 14 நிறுவனங்கள் கையெழுத்து இட்டு இருக்கின்றன. கொரோனா நேரத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகத் தமிழக திகழ்ந்து வருகிறது. அதனால் வீழ்ந்த பொருளாதாரத்தை சரிசெய்யவும் முடிந்தது. அந்த வகையில் நேற்று முதலமைச்சர் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேலும் 14 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க இருக்கின்றன.
புதிய நிறுவனங்களின் முயற்சியால் தமிழகத்தில் மேலும் 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பினையும் சலுகைகளையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. இதன் விளைவாக தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து தமிழகத்தில் முதலீடுகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உள்ளிட்ட 14 தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமைக்கப்பட இருக்கிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்பல்லோ டயர்ஸ் ஓரகடத்திலும் அமைய இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன. இந்த 14 நிறுவனங்களும் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க இருப்பதால் தமிழக இளைஞர்கள் 7 ஆயிரம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்த நிலையில் மேலும் 14 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஆண்டு மட்டும் 56 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழகம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருப்பதாக பிராஜக்ட் டுடே நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஜுலை-செப்டம்பர் வரையிலான 3 மாதங்களை கணக்கில் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout