+1 பாடத்தை நடத்தாக பள்ளிகளுக்கு சரியான ஆப்பு! தமிழக அரசு அதிரடி
- IndiaGlitz, [Monday,May 22 2017]
தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் +2 படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக +1 வகுப்பிலேயே +2 பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்கள் அடிப்படை அறிவுக்காக கல்வி கற்காமல் மதிப்பெண்களுக்காக மட்டுமே கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோர்களாலும், மாணவர்களாலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டிருந்த நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே +1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட தமிழக அரசு, இனிமேல் பாடவாரியாக உள்ள மொத்த மதிப்பெண்ணை, 200-ல் இருந்து 100ஆகக் குறைத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இனிமேல் +1 மற்றும் +2 ஆகிய வகுப்புகளுக்கு, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும், +1 மற்றும் +2 வகுப்புகளில், தலா 100 மதிப்பெண்களைக் கணக்கிட்டு, சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கல்லூரிகளில் முன்று ஆண்டுகளின் மதிப்பெண்களை ஒரே சான்றிதழில் வழங்குவது போன்றே இந்த நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய முறையால் அனைத்து பள்ளிகளும் +1 பாடத்தை நடத்தியே தீரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்வு நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாகக் குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை கணக்கில் கொண்டு பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரவும், அதேபோல் அரசு பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சீருடை முறையை கொண்டு வரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.