சத்தமில்லாமல் ஒரு சாதனை… கொரோனா நேரத்திலும் வியக்க வைத்த தமிழக முதலீடுகள்!!!

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தாக்கத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உலகமே அரண்டு கிடந்தது. பொருளாதாரத்தில் உச்சத்தைத் தொட்ட நாடுகளும் கொரோனா நேரத்தில் இழப்பீடுகளை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவிலும் இதே நிலைமை இருந்தபோது தமிழக அரசு மட்டும் வீழ்ந்த பொருளாதாரத்தை சரிகட்டும் நோக்கோடு அதிக முதலீடுகளை ஈர்த்து பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அடுக்கடுக்காக முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வந்தார். இதனால் பல்வேறு அயல்நாட்டு கம்பெனிகள் தமிழகத்தில் தொழில் தொடங்கவும் ஆர்வம் காட்டின. அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பதங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இதில் உள்ளூர் தொடங்கி உலகப் பொருளாதாரம் வரை பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு தமிழகத்தில் தொழில் தொடங்கி இருக்கின்றன.

அதில் இந்த ஆண்டின் ஏப்ரல்- செப்டம்பர் வரை 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அக்டோபர் 12 ஆம் தேதி 10 ஆயிரத்து 55 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொழில் திட்டங்களை தமிழகத்தில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியது.

அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திலும் 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 26 ஆயிரத்து 509 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் 19 ஆயிரத்து 995 கோடி ரூபாய் மதிப்பில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. மேலும், 27 ஆயிரத்து 324 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் மதிப்பில் 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல 47 கோடி ரூபாய் மதிப்பில் 385 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் காமல் ஐடிஃசோன் என்ற நிறுவனத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கொரோனா பரவல் காலத்தில் தமிழகம் இவ்வளவு முதலீடுகளை ஈர்த்தது இந்திய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.