இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா??? வெளியான புது அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதோடு கொரோனா பரவலைக் கட்டப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது.
இதையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை சில நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி வழங்கி இருக்கிறது. அந்தப் போட்டிகளில் நடத்தப்படும் இடத்தைப் பொறுத்து 50% நபர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் இருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்ட நெறிமுறைகள் வெளியிடப்பட்டு 2017 முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டில் காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்களைத் தவிர பொது மக்களும் நேரடியாக கலந்து கொள்கின்றனர்.
இதனால் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டு உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது எனத் தெரிவித்து உள்ளது.
இதனால் ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப் படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப 50% அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப் படுகிறது. அதோடு பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை (தெர்மல் சோதனை) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப் படுகிறது. மேலும் இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments