அரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!
- IndiaGlitz, [Monday,September 13 2021]
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்காகத் தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அளவான 30% இடஒதுக்கீடு இனி 40% ஆக வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மேலும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான தகுதித்தேர்விலும் இனி தமிழ்மொழி பாடம் கட்டாயமாக்கப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று மனிதவள மேலாண்மைத்துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதற்குப் பதிலளிக்கும்போது சில புதிய அறிவிப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
அதில், தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும்.
அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழிப்பாடம் தகுதித்தேர்வில் கட்டாயமாக்கப்படும்.
கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னிரிமை வழங்கப்படும். அதாவது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் இந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெளிவு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
மேலும் அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டினை 30% லிருந்து 40% ஆக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. பாலினச் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பைப் பெண்கள், சமூகநல ஆர்வலர்கள் எனப் பலரும் வரவேற்றுள்ளனர்.