மெரினா உட்பட அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி.. முழு விவரங்கள்..!
- IndiaGlitz, [Saturday,May 06 2023]
சென்னை மெரினா கடற்கரை உட்பட அரசு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான இடங்களில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதித்து உள்ள இடங்களின் பட்டியல் இதோ:
1. ராஜாஜி மண்டபம் .
2. சென்னை தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள்.
3. வள்ளுவர் கோட்டம்.
4. அரசு மனநல காப்பக நிறுவனம், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு பூங்காக்கள்.
5. தலைமை வனக்காப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகள்.
6. மீன்வளத்துறை கீழ் உள்ள மீன் வளர்ச்சி பணிகள்.
7. மெரினா கடற்கரை உட்பட அனைத்து கடற்கரைகள்.
8. பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள நீர்ப்பாசன திட்ட பகுதிகள்.
9. நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள், தெருக்கள் மற்றும் கட்டிடங்கள்.
10. சிறைத்துறை தலைவர் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் மத்திய சிறைச்சாலையின் வெளிப்புறங்கள்.
மேற்கண்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த அரசாணை பிறப்பிக்க உதவியாக இருந்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.