மீனவன் உயிரின் மதிப்பு ரூ.5 லட்சம் தானா? இன்னொரு உயிரிழப்புக்கு முன் நடவடிக்கை தேவை!
- IndiaGlitz, [Tuesday,March 07 2017]
இன்று அதிகாலை பிரிட்டோ என்ற மீனவர் இலங்கை கடற்படையினர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக மீனவரை நாங்கள் சுடவில்லை என்று இலங்கை அமைச்சர் கருத்து கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வங்கக்கடலில் இந்திய, இலங்கை கடற்படைகள் மட்டுமே ரோந்து வரும் நிலையில் இலங்கை கடற்படை சுடவில்லை என்றால் வேறு எந்த கடற்படை சுட்டது என்பதே அனைவரின் சந்தேகமாக உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அரசுகளுக்க்கு உண்டு.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் கண்டிப்புடன் கூடிய பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இழந்த உயிர்கள் போதும், இனிமேலும் ஒரு உயிரை இழப்பதற்கு முன்னர் மத்திய அரசும், மாநில அரசும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்கி, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டதோடு ஒரு அரசின் கடமை முடிந்துவிடவில்லை, விலை மதிப்பில்லாத இன்னொரு உயிர் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். 122 எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் வைத்து பாதுகாத்த அக்கறையில் சிறிதளவேனும் மீனவர்கள் உயிர்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.