3 கோடி உதவித்தொகை பெற்ற விவசாயியின் மகள்… கிராமத்தில் இருந்து அரிய சாதனை!

  • IndiaGlitz, [Thursday,December 23 2021]

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் 3 கோடி அளவிற்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளார். இந்தத் தகவல் இந்திய அளவில் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

ஈரோடு காசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுவாமிநாதன். இவருடைய 14 வயது மகள் ஸ்வேதா தனது சிறிய வயதிலிருந்தே அப்பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனம் ஒன்றின் மேம்பாட்டுத்திறன் பயிற்சிக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளார். Dexterity Gobal எனப்படும் அந்தப் பயிற்சிக்குழு தொழில் மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதோடு கிராமப்புறம் சார்ந்த குழந்தைகளுக்கு வெளிநாடுகளில் கல்வி கிடைக்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் சுவாமிநாதன் என்பவரின் 14 வயது சிறுமி தற்போது 3 கோடி அளவிற்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவின் Chicago பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டப்படிப்பை பயிலவுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பிரபல தொழில் நிறுவனத்திற்கும் சிறுமி ஸ்வேதாவிற்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Dexterity Gobal எனும் பயிற்சிக்குழு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற அல்லது தொலைதூர இந்திய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பின் தங்கிய மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாக ஈரோடு பகுதியில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.