இந்தியாவிலேயே முதல் முறையாக நவீன குறைதீர் திட்டம்… தமிழக மக்கள் வரவேற்பு!
- IndiaGlitz, [Thursday,February 18 2021]
பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்த படியே, தங்களுடைய குறைகளை 1100 என்ற செல்போன் எண் மூலம் அதுவும் இலவசமாக தமிழக அரசுக்குத் தெரிவிக்கும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தர். இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக நவீன நோக்கில் உருவாக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டதோடு வரவேற்பையும் அளித்து வருகின்றனர்.
இச்சிறப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 1100 என்ற செல்போன் எண்ணைக் கொண்டு அலைபேசி மூலம் தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்க முடியும். இதைத்தவிர 24 மணி நேரமும் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மற்றும் CM HELPLINE செயலி வழியாகவும் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு நவீன குறைதீர் திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதற்காக சென்னை சோழிங்க நல்லூரில் 12.79 கோடி ரூபாய் செலவில் 100 இருக்கைகளை கொண்ட உதவி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இச்சிறப்பு திட்டத்தின் மூலம் குறைகளைத் தெரிவிக்கும் பொது மக்கள் தங்களுடைய ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை ஒவ்வொரு அழைப்பின்போது தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுகுறித்த தகவல்களை மனுதாரருக்கு குறுஞ்செய்தி வழியாகத் தெரிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் பொதுமக்கள் கூறும் குறைகளை முதலமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்களும் விரைந்து ஆய்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.