'பொன்னியின் செல்வன்' வெற்றியால் தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமின்றி தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.665 கோடி வசூல் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழ்நாட்டில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் தான் அதிகபட்சமாக ரூ.175 கோடி வசூலித்து உள்ள நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்' வெற்றியின் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கும் அதிகமாக வருகின்றனர் என்றும் இதனால் தமிழக சுற்றுலாத் துறைக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக தஞ்சை பெரிய கோவிலில் வெளிநாட்டினர் அதிகம் வருகின்றனர் என்றும் தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலை பார்த்து ஆச்சரியமடைந்து தங்களது சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஒரே ஒரு திரைப்படம் தஞ்சை பெரிய கோவிலை உலக அளவுக்கு பிரபலமாக்கி தமிழகத்திற்கே பெருமையை தேடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.