பாக்யராஜின் சர்ச்சை பேச்சு.. தமிழக அரசின் உண்மை அறியும் பிரிவு விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,February 14 2024]

இயக்குனர் பாக்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறிய நிலையில் அந்த கருத்துக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள அம்பார பாளையம் என்ற பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் போது திடீரென மாயம் ஆகி விடுவார்கள் என்றும், அவ்வாறு காணாமல் போனவர்களை கண்டுபிடித்து கொடுக்க என்றே சிலர் அந்த பகுதியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

ஒருவேளை அவர்கள் உயிரிழந்து விட்டால் அவர்கள் உடலை எடுத்து தரும் பணியையும் ரிஸ்க் எடுத்து செய்வார்கள் என்றும் அதன் பின்னர் பிணத்தை எடுத்துக் கொடுத்தவுடன் உறவினர்களிடம் பேரம் பேசி பணத்தை கறந்து விடுவார்கள், இது தொடர்கதை ஆகி வரும் நிலையில் தான் ஒரு நாள் அந்த பகுதியில் உள்ளவர்களே சுற்றுலா பயணிகளை நீருக்குள் அமுக்கி கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்துவிட்டு அதன் பின்னர் பண பேரம் பேசுவதாக தெரிய வந்தது என்றும் கூறியிருந்தார்.

பாக்யராஜின் இந்த பேச்சுக்கு தமிழக அரசின் உண்மை அறியும் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து. உண்மை கண்டறியும் குழு தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:

பாக்யராஜ் அவர்கள் வீடியோவில் கூறியது போல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே ஆற்றில் குளிக்க வருபவர்களை கொலை செய்வதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பகுதியில் எந்தவிதமான உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. இது போன்ற ஒரு குற்ற சம்பவம் கூட காவல் நிலையத்தில் புகாராக பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தவறான தகவல்களை, வதந்திகளை பரப்புவது குற்றச்செயல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.