தமிழக தேர்தல் 2021....! திமுக முதல் நோட்டா வரை புள்ளி விவரங்கள்…ஓர் அலசல் !
- IndiaGlitz, [Thursday,May 06 2021]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், மே-2-ஆம் நாள் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. கொரோனா பெருந்தொற்றுக்கும் மத்தியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் தேர்தல் நடந்து முடிந்தது என சொல்லலாம். இத்தேர்தலில் ஐந்துமுனை போட்டி நிலவிய நிலையில், ஒவ்வொரு கட்சியின் வாக்கு எண்ணிக்கை மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாக்கு சதவீதம் குறைவாக இருப்பினும், 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. மின்னணு வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் என சுமார் 4.623 கோடி வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 107 கட்சிகளும், 2073 சுயேட்சை கட்சிகளும் களமிறங்கி போட்டியிட்டுள்ளனர். மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முக்கிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தும், சில இடங்களில் மாற்றுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளின் தகவல்கள் இதில் சேர்க்கப்படவில்லை. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 92 கட்சிகளும், 1547 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே களமிறங்கியிருந்தனர்.
தமிழகத்திலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்களை இங்கு பார்க்கலாம்.
1.தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பாக களமிறங்கிய ஐ. பெரியசாமி அவர்கள் சுமார் 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார்.
2.இதையடுத்து திருவண்ணாமலை தொகுதியில் களமிறங்கிய திமுக-எ.வ. வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
3.திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
4.சேலம் மாவட்டத்தில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இவர்களை தொடர்ந்து மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களை பார்ப்போம்.
தி. நகர் தொகுதி ஜெ. கருணாநிதி- 137 வாக்குகள் , மொடக்குறிச்சி தொகுதி மருத்துவர் சரஸ்வதி -281 வாக்குகள், தென்காசி தொகுதி பழனி நாடார் -370 வாக்குகள் ,துரைமுருகன் - 746 வாக்குகள் என குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிகம் வாக்கு பதிவான தொகுதிகள் :
1.சோழிங்கநல்லூர் - 3.9 லட்சம் வாக்குகள்
2.கவுண்டம்பாளையம்,மாதவரம், ஆவடி - 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள்
குறைந்த வாக்கு பதிவான தொகுதி என பார்த்தால் துறைமுகம் தான், இத்தொகுதியில் 1,01,650 வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகமான வாக்குகளை பெற்ற வேட்பாளர் என்றால் சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்தான்.
அதிக சுயேட்சை கட்சிகள் போட்டியிட்ட தொகுதி கரூர் தான். சுயேட்சையே போட்டியிடாத தொகுதி பவானிசாகர்.
பனங்காட்டுப்படை கட்சி சார்பாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடர் 37,727-வாக்குகளை வாங்கினார். டெபாசிட் இழக்காத ஒரே தனிக்கட்சி வேட்பாளரும் இவர்தான்.
இவரைத்தொடர்ந்து சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக களமிறங்கிய புதுக்கோட்டை வேட்பாளர் பாலகிருஷ்ணன் 23,771- வாக்குகள், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக போட்டியிட்ட திருமயம் வேட்பாளர் செல்வகுமார், 15144 - வாக்குகள் பெற்றிருக்கிறார்கள்.
திமுக மற்றும் கட்சியின் கூட்டணி :
திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சுமார் 12 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கியது. திமுக -173,காங்கிரஸ் -25 ,சி.பி.ஐ -6, சி.பி.எம்- 6, விசிக- 6, மதிமுக- 6, கொ.ம.தே.க- 3, இ.யூ.மு.லீக்- 3, ம.ம.க -2, ஃபார்வார்ட் பிளாக் -1 , தமிழக வாழ்வு உரிமை -1 , மக்கள், விடுதலை கட்சி -1 , ஆதித்தமிழர் பேரவை - 1
இதில் 159 தொகுதிகளில் 1 இடமும், 73 தொகுதிகளில் 2 இடமும், கோவில்பட்டி, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் 3-ஆம் இடத்தையும் பெற்றது. அதிமுக கூட்டணியுடன் ஒப்பிடுகையில், திமுக இருமடங்கு தபால் வாக்குகளை 1,65,727 அதிகமாக பெற்றுள்ளது.
நேருக்கு நேர் இரட்டை இலையுடன் களமிறங்கிய, உதயசூரியன் 109 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பிற கூட்டணி கட்சிகளை பார்த்தால் காங்கிரசிற்கு கிள்ளியூர், சிபிஐ-க்கு தளி, சிபிஎம்-க்கு கீழ்வேளூர், விசிகவிற்கு காட்டுமன்னார்கோயில், மதிமுகவிற்கு சாத்தூர் உள்ளிட்டவை பலமான தொகுதிகளாக உள்ளன. ஆனால் இதர கட்சிகள் தனிசின்னத்தில் களமிறங்காமல், உதயசூரியின் சின்னத்தில் தான் கணக்கில் வரும்.
அதிமுக கூட்டணி :
234 தொகுதிகளில் 179 தொகுதிகளில் தனித்தும், இதர தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி -23 ,பாரதிய ஜனதா கட்சி- 20, தமிழ் மாநில காங்கிரசு -6, பெருந்தலைவர் மக்கள் கட்சி -1,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் -1,புரட்சி பாரதம் -1,மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- 1,மூவேந்தர் முன்னணிக் கழகம் -1,பசும்பொன் தேசிய கழகம் - 1 உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் களமிறங்கியது அதிமுக .
இதில் 39.7% வாக்குகள் பெற்று 75 தொகுதிகளில் 1-இடத்தையும், 159 தொகுதிகளில் 2-இடத்தையும் பெற்று, ஆத்தூர் தொகுதியில் டெபாசிட்டை இழந்தது அதிமுக.
நாம் தமிழர் கட்சி:
234 தொகுதிகளிலும் தன்னிச்சையாக களமிறங்கிய நாம் தமிழர், 177 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 177 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் அதிரடியாக களமிறங்கியது. இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூர் தொகுதியில், 48,597 வாக்குகளையும், 24.30 % வாக்கு வீதத்தையும் பெற்றார். ஆனால் டெபாசிட்டை இழக்கவில்லை.
நாம்தமிழர் 177 தொகுதிகளில் 3- இடமும், 57 தொகுதிகளில் 4-வைத்து இடமும் பெற்றுள்ளது. இதில் அதிமுகவின் வெற்றிவித்தியாசத்தை தீர்மானிக்கும் அணியாக நாம் தமிழர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மையம் :
சட்டமன்ற தேர்தலில் மநீம -144 தொகுதிகளில் தனித்தும் , கூட்டணி கட்சிகளான ஐ.ஜே.க -40,சமக 37,தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி- 10,தமிழ்நாடு இளைஞர் கட்சி - 3 -உடனும் களமிறங்கியது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் 218 தொகுதியில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் தான் டெபாசிட்டை இக்கட்சி இழக்கவில்லை.
25 தொகுதிகளில் 3-ம் இடமும், 77 தொகுதிகளில் 4-ம் இடமும், 56 தொகுதிகளில் 5-ஆம் இடமும், 24 தொகுதிகளில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளது. கமல்ஹாசன்,மருத்துவர் மகேந்திரன், பழ. கருப்பையா, ஸ்ரீபிரியா, சந்தோஷ் பாபு மற்றும் பத்மாபிரியா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வெற்றி,தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக இத்தேர்தலில் இருந்துள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:
277 தொகுதிகளில் இக்கட்சி டெபாசிட்டை இழந்தது. டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட ஒரு சில வேட்பாளர்கள் வெற்றி வித்தியாசத்தை தீர்மானிப்பவர்களாக இருந்துள்ளனர். அமமுக 2.8% வாக்குகளை மட்டுமே இம்முறை பெற்றுள்ளது.
நோட்டா :
பெரும்பாலான தொகுதிகளில் அமமுக மற்றும் மநீம உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகளை விட நோட்டாவில் அதிகம் வாக்குகள் விழுந்துள்ளன. சுமார் 3,45,538 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது.2,812 தபால் வாக்குகள் நோட்டாவிற்கு வந்துள்ளது. 12 தொகுதியில் 4ம் இடமும், 77 தொகுதிகளில் 5-ம் இடத்தையும் நோட்டா பெற்றுள்ளது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் அதிக நோட்டாக்கள் பதிவாகியுள்ளது. விராலிமலையில் குறைந்த அளவில் நோட்டாக்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.