எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்… பகவத் கீதை வழியே ஓபிஎஸ் சொல்ல வருவது???

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

 

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகவத்கீதை வரிகளை கோடிட்டு இருக்கிறார். இந்த பதிவு அரசியல் மட்டத்தில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

தமிழகச் சட்டசபை தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான போட்டி இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதனால் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு அதிகரித்து இருந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதோடு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் கலந்து பேசி அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான அறிவிப்பை வரும் 7 ஆம் தேதி வெளியிடுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு வெளிவரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் எனக் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

மேலும் அதில் “தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே என முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! எனப் பதிவிட்டு இருக்கிறார்.