தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை- உடனே விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தின் வருவாய் குறைந்து காணப்படுகிறது. அதைத்தவிர சுகாதாரத் திட்டங்கள், மாநிலங்களுக்கான நலத்திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த முடியாமல் தற்போது காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.12,250 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிலுவையில் இருப்பதாகவும் பிரதமர் அதை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
நாடு ழுழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கில் கடந்த 2017 ஜுலை 1 ஆம் தேதி சரக்கும் மற்றும் சேவை வரி (GST) இந்தியாவில் அமல் படுத்தப்பட்டது. இதனால் இந்தியா முழுக்க அனைத்துப் பகுதிகளிலும் ஒரே வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தது. இதற்குமுன் மாநிலத்திற்கு கிடைத்து வந்த வரிவருவாய் இழப்பீட்டை ஈடுசெய்யும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இழப்பீட்டுத் தொகை மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14% விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை ஆண்டுதோறும் வழங்கும் எனவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டிக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. அதையடுத்து சென்ற ஜுலை மாத இறுதியில் 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக மத்திய அரசு ரூ.1,65,302 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியது. இந்தத் தொகையில் தமிழகத்துக்கு ரூ. 12.305 கோடி இழப்பீட்டுத் தொகையாக கிடைத்தது. இந்தத் தொகை கடந்த ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இழப்பீட்டுத் தொகை தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பேரிடரால் மாநிலத்தின் இயல்பு நிலைமையை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.12,250 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். தற்போதைய நிதிநெருக்கடி சூழலில் காலம் தாழ்த்தாமல் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில் கொரோனா பாதிப்பால் மாநில அரசுகளின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்துக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் முதல் ஜுலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.11,459.37 கோடி நிலுவையில் உள்ளதாகத் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் கூடுதலாகச் செலவிடப் பட்டுள்ளது எனவும் முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பொருளாதார வளர்ச்சி சூடுபிடிக்க வேண்டுமானால் மாநில அரசுகளுக்கு தங்களது பொதுத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு நிதி ஆதாரம் தேவை எனவும், ஜிஎஸ்டி இழப்பீட்டை விடுவித்து இச்சூழலைச் சமாளிக்க ஆதரவு தருமாறும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,65,000 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் ரூ.95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக்கொள்ள நடப்பு ஆண்டில் மட்டும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
அதன்படி முதலாவதாக ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.97,000 கேடி கடன் பெற்றுக் கொள்ளலாம். மற்றொன்று மாநில அரசுகள் கடன்பெறும் வரம்பை 0.5% உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒரு வாய்ப்பை தேர்ந்தெடுத்து அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் மாநிலங்களுக்கு போதுமானதாக இருக்காது என தமிழக அரசு கருத்துக் கூறியிருக்கிறது. எனவே இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி கோரிக்கை வைத்திருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments