கோலாகலமாக துவங்கிய தமிழக முதல்வரின் தேர்தல் பிரச்சாரம்… தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!!
- IndiaGlitz, [Saturday,December 19 2020]
தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கப் போவதாக அறிவித்த இருந்தார்.
அதன்படி எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளியில் அருகே உள்ள பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலுக்கு இன்று பகல் 11 மணி அளவில் முதல்வர் வந்து சேர்ந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் திறந்த வேனில் நின்றவாறு அங்கு திரண்டு நின்ற மக்கள் மத்தியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த சென்றாய பெருமாள் கோவில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின்போதும் அவர் தனது பிரச்சாரத்தை இங்கிருந்தே தொடங்கி இருக்கிறார். இந்தப் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே முதல்வர் 5 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் நங்கவள்ளி ஊராட்சிக்குட்பட்ட சீரங்கனூர், இருப்பாளி ஊராட்சி, எடப்பாடி ஊராட்சிக்குட் பட்ட ஆலச்சம்பாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய 5 பகுதிகளில் அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டன. முதல்வரின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதை அடுத்து அவரது கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் வழங்கி வருகின்றனர். மேலும் பிரச்சாரத்திற்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மலர்தூவி வரவேற்ற தொண்டர்கள் பேனர்கள் மற்றும் கொடி தோரணங்களையும் தொங்கவிட்டு இருந்தனர்.