எங்களை சீண்டி பார்க்க வேண்டாம்.. பாஜகவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அநியாய தொல்லைகள் கொடுக்கப்படுவது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும், இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை, நாங்கள் ஆட்சிக்கு மட்டும் கட்சியை நடத்துபவர்கள் அல்ல, கொள்கைக்காக கட்சி நடத்துபவர்கள், கொள்கையை காப்பாற்ற கடைசி வரை போராடுவோம்.

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆபத்து ஏற்படும் வகையில் செந்தில் பாலாஜிக்கு தொல்லை கொடுத்து இருதய நோயை உருவாக்கியுள்ளனர். இதைவிட அப்பட்டமான அரசியல் வேறு இருக்க முடியுமா? அவர் சாதாரணமானவர் அல்ல, ஐந்து முறை எம்எல்ஏ ஆனவர், இரண்டு முறை அமைச்சரானவர். தீவிரவாதி போல் அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் எந்த ஆவணத்திற்கும் விளக்கம் தருவதாக அவர் கூறியும் 18 மணி நேரம் அடைத்து வைத்து அவரை சித்திரவதை செய்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதியும் தரவில்லை, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நாங்கள் சென்று சந்தித்தோம், இன்னும் கொஞ்சம் கவன குறைவாக இருந்திருந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்.

அவரை அவசர அவசரமாக இரவோடு இரவாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறதா? உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ரெய்டுகள் நடத்தப்படவில்லை, ஏனெனில் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. தமிழகம் போன்ற எதிர்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும் பாஜக அரசியல் செய்கிறது. பாஜகவுக்கு மக்களை சந்தித்து அரசியல் செய்ய தெரியாது, அமலாக்கத்துறை மூலம் பயமுறுத்தி அரசியல் செய்து வருகிறது’ என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.