விவசாயிகளின் நலனுக்காக 10 இடங்களில் பிரம்மாண்ட சந்தை- முதல்வர் அதிரடி அறிவிப்பு!
- IndiaGlitz, [Friday,February 19 2021]
விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தை உருவாக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புது அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முன்னதாக தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் நிவர் புயலினால் ஏற்பட்ட இடுபொருள் நிவாரணத்தை உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த வகையில் தற்போது 20 கோடி ரூபாய் செலவில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தை உருவாக்கப்படும் என்று புதிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார். மேலும் ஒரு பெரிய சந்தை நெல்லையில் அமைக்கவும் தமிழக அரசு சார்பில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் பயிரிடும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக இத்திட்டம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தென்காசி தனி மாவட்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் முன்பை விட வேளாண் பணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் அக்கறை செலுத்த முடியும் எனக் கூறினார். அதோடு தமிழகத்தில் எத்தனையோ முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சி பொற்கால ஆட்சியாக அமைந்து உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற நிலையை உருவாக்க குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் தமிழக முதல்வர் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.