டிடிவி தினகரனை நம்பிச் சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்-முதல்வர் எச்சரிக்கை!
- IndiaGlitz, [Wednesday,February 10 2021]
பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவை அமமுக கட்சியினர் பல இடங்களில் மரியாதை செய்து வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் சில அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டதாகச் செய்தி வெளியானதை அடுத்து அவர்களை கட்சியில் இருந்து விலக்கி விட்டதாக அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படப் போவதாகவும் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனை நம்பிச் சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டுமென அதிரடியாகக் கருத்துத் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை நம்பி சென்று நடுரோட்டில் நிற்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், கட்சியில் 10 ஆண்டு காலமாக உறுப்பினர் இல்லாத டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக முயற்சித்து வருவதாகவும் கூறிய அவர், அத்தகைய முயற்சிகளை அதிமுக முறியடிக்கும் என்றும் சூளுரை எடுத்துக் கொண்டார்.