பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி… முக்கியக் கோரிக்கை!
- IndiaGlitz, [Monday,January 18 2021]
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு சூடு பிடித்து இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதற்காக இன்று மதியம் டெல்லிக்கு செல்ல உள்ள தமிழக முதல்வர் பிரதமரிடம் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. அதில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுக, பாஜக கூட்டணியை குறித்து உறுதி செய்யும் விதமாகவும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
இத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டி இடுகின்றன. திமுகவுக்கு சவால் அளிக்கும் வகையில் அதிக நலத் திட்டங்களை பிரச்சாரத்தின் போது பட்டியல் இட விரும்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இத்திட்டத்திற்கான நிதி உதவி கோரி பிரதமரிடம் பேச 2 நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்படுகிறார்.
முதல்வருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர். பிரதமரை முதல்வர் இன்று சந்திக்கும்போது தமிழகத்துக்கான திட்டங்கள், நிதி விடுவிப்பு குறித்த கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வர் பிரதமரிடம் அளிப்பார் என்றும் கூறப்பட்டு உள்ளது.