ஆறடியில் ஒரு கேக் சிலை… மரடோனாவை கவுரவித்த தமிழர்!!!
- IndiaGlitz, [Monday,December 28 2020]
மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பேக்கரி கடைக்காரர் ஆறடியில் கேக் சிலையை வடிவமைத்து உள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ரங்கநாதன் என்பவர் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் செலபிரேஷனுக்கு கேக் செய்வது வழக்கமாம். இந்த ஆண்டும் கேக் செய்ய முடிவெடுத்த அவர் மறைந்த கால்பந்து வீரர் மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்த விரும்பி இருக்கிறார்.
இதற்காக 60 கிலோ சர்க்கரை 270 முட்டைகளைப் பயன்படுத்தி மரடோனாவிற்கு ஆறடியில் ஒரு கேக் சிலையை உருவாக்கி விட்டார். இந்தக் கேக்கை பார்த்த பலரும் சதீஷ்க்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு இவர் இளையராஜா, அப்துல் கலாம், பாரதியார் எனப் பல பிரபலங்களுக்கும் கேக் சிலையை வடிவமைத்து பார்வையாளர்களை மகிழ்வித்து இருக்கிறார்.
60 வயதான டியாகோ மரடோனா கடந்த நவம்பர் 26 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அர்ஜெண்டைனா வீரரான இவர் அந்நாட்டிற்காக 4 உலகக்கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். அதில் 1986 இல் இவர் தலைமையிலான அர்ஜெண்டைனா அணி வெற்றி வெற்றது. மேலும் அந்த ஆண்டில் சிறந்த வீரராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு அர்ஜெண்டைனா சார்பாக 91 கால்பந்து போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.