நம்பிக்கை வாகெடுப்பு குறித்த ஸ்டாலின் வழக்கு. நாளை விசாரணை
- IndiaGlitz, [Tuesday,February 21 2017]
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இந்த வாக்கெடுப்பில் அமளி ஏற்பட்டதால் திமுக உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடந்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி
எதிர்கட்சியினர் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.