தமிழகச் சட்டப்பேரவை தேர்தல்- பா.ஜ.க தேர்தல் அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து களம் காணும் பாஜக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் சென்னை மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்படும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும், 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் எனப் பல்வேறு செயல்திட்டங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி “தொலைநோக்கு பத்திரம்” என்ற பெயரில் சென்னையில் நேற்று தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த அறிக்கையில் 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் வருடாந்திர உதவித்தொகை 6,000 வழங்கப்படும். தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும்.
இந்து கோவில்களின் நிர்வாகம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும். வேலையிழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர். 18-23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும். 8-9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக டேப்லெட் வழங்கப்படும்.
தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும். பள்ளிப் பாடத்திட்டத்தில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், விவேக சிந்தாமணி போன்ற நீதி நூல்கள் மற்றும் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மீக நூல்கள் சேர்க்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயரவும் ஆறுகளில் நீரோட்டம் சீராக இருக்கவும் முற்றிலுமாக 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும். கள்ளத்தனமாக மணல் அள்ளுபவர்கள் பிரிக்கப்படும்.
சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும். தற்போது இடஒதுக்கீட்டு சலுகை பெறாத சிறுபான்மை மதத்தினர் உட்பட 67 பிரிவினர் பயன்பெறும் வண்ணம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பசு இனத்தை பாதுகாக்க பசுவதை தடைச் சட்டம் அமல்படுத்தப்படும். ஹ
இறைச்சிக்காக கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பசுக்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். வழிபாட்டு உரிமை என்பது கட்டாய மதம் மாறுகின்ற உரிமையாகாது. ஆசை வார்த்தை காட்டி மற்றும் அச்சுறுத்தி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும். மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க நீதிபதி வேணுகோபால் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தப்படும் போன்ற செயல்திட்டங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments