விருதுகளை மிஸ் செய்த தமிழ் திரைப்படங்கள்
- IndiaGlitz, [Friday,April 13 2018]
2017ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகளும் பாடகி சாஷா திரிபாதிக்கு ஒரு விருதும், சிறந்த தமிழ் படமாக 'டூலெட்' படத்திற்கு விருதும் என மொத்தம் நான்கே விருதுகள் தான் தமிழ் படத்திற்கு கிடைத்துள்ளது.
தேசிய விருதின் பல்வேறு பிரிவுகளுக்கு மொத்தம் 32 படங்கள் போட்டியிட்ட நிலையில் வெறும் நான்கு விருதுகள் என்பது தமிழ் திரைப்படவுலகிற்கு பெரும் ஏமாற்றம் தான்
குறிப்பாக விஜய்யின் 'மெர்சல்' படம் சமீபத்தில் பிரிட்டன் நாட்டின் விருதினை வென்றதால் கண்டிப்பாக தேசிய விருதும் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நயன்தாரா நடிப்பில் கோபிநயினார் இயக்கத்தில் வெளியான 'அறம்', சிறந்த திரைக்கதையில் அமைந்த '8 தோட்டாக்கள்', ராம் இயக்கிய 'தரமணி', சமுத்திரக்கனியின் 'தொண்டன்', ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற 'வேலைக்காரன்', அதிரடி ஆக்சன் படமான 'விக்ரம் வேதா' ஆகிய படங்களுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் அதிதிபாலன் நடித்த 'அருவி' திரைப்படம் தேசிய விருது போட்டிக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்த படம் பட்டியலில் இருந்து விடுபட்டதாகவும், எப்படி விடுபட்டது என்றே தெரியவில்லை என்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். விருது வாங்கும் தரம் இருந்தும் அருவி படம் பட்டியலில் இருந்து விடுபட்டது தமிழ் திரையுலகினர்களுக்கு ஒரு பெரிய வருத்தம்தான்