தமிழ்நாடு திராவிட நாடுப்பா.. இங்க உங்க அரசியல் பலனளிக்காது: பிரபல தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டணியாக தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை கூட்டணி கட்சியினர் அணி மாறினால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு கிட்டத்தட்ட 300 தொகுதிகள் கிடைத்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மற்றும் அதிமுக ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறிய போதிலும் அந்த கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி நடை போட்டு உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது சமூக வலைத்தளத்தில் ’பாஜகவுக்கு ஆன்லைனில் ஆதரவாக பேசியவர்கள் தற்போது தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பாராட்டுக்கள். தமிழ்நாடு திராவிட நாடுப்பா, இங்கே மதத்தை கொண்டு அரசியல் செய்தால் நிச்சயம் பலன் அளிக்காது’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.