சர்வதேச அளவில் 24 விருதுகளை வென்ற தமிழ் திரைப்படம்: 7 விருதுகளை வென்ற நடிகர் மோகணேஷ்!
- IndiaGlitz, [Wednesday,October 26 2022]
இந்த உலகில் எல்லாவற்றையும் விட ஒரு உயிரின் மதிப்பே உயர்ந்தது மிக முக்கியமானது. ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை, இந்த கருத்தை மையமாக வைத்து, ஒரு மாறுபட்ட புது முயற்சியாக, இளைஞர்களின் திறமையில் உருவாகியுள்ள திரைப்படம் “21 கிராம்ஸ் பிலாசபி”. Auraz Pictures & Cult squad film தயாரிப்பில், இயக்குநர் யான் சசி இயக்கத்தில், அறிமுக நடிகர் மோகணேஷ், பூ ராமு, ஜோசப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு பிரச்சனையில் மகனை, ஒரு ரௌடி கடத்திவிட அவனை காணாமல் தேடுகிறார் தந்தை. தலை மட்டும் வெளியிலிருக்குமாறு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடும் பாத்திரத்தில் மோகணேஷ் நடித்துள்ளார் . சூரரைப்போற்று, பூ என பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற நடிகர் பூ ராமு தந்தையாக நடித்துள்ளார்.
அறிமுக நடிகர் மோகணேஷ் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல்படத்திலேயே இதுவரையிலும் பல சர்வதேச திரைவிழாக்களில் 7 சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் சில திரை விழாக்களில் சிறந்த இயக்குநருக்கான விருதினை யான் சசி பெற்றுள்ளார்.பல விழாக்களில் மாமனிதன் முதலாக பல பிரபல தமிழ்ப்படங்களும் கலந்து கொண்டது என்பது முக்கியமானது.
இயக்குநர் யான் சசி, நடிகர் மோகணேஷ் இருவரும் இணைந்து ஒரு சிறு பைலட் ஃபிலிமாக ஒரு படமெடுக்கலாம் என இறங்கிய முயற்சியில், இந்தப்படம் உருவாகியுள்ளது. முழுக்க மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 52 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் உலகம் முழுக்க இதுவரை 24 விருதுகளை வென்றுள்ளது. சவுந்தர்ராஜான், அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விஜய் சித்தார்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்படவிழா, தாகூர் சர்வதேச திரைப்படவிழா, சிங்கப்பூர் சர்வதேச திரைப்படவிழா, ரோம், டோக்கியோ, அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்படவிழா என உலகம் முழுக்க இதுவரையிலும் 24 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
உலகம் முழுக்கவுள்ள திரை ரசிகர்கள் கொண்டாடிய இப்படம், விரைவில் தமிழ் மக்கள் பார்வைக்கும் வரவுள்ளது.