கோவின் செயலியில் இனி தமிழ் இருக்கும்… மத்திய அரசு உறுதி!
- IndiaGlitz, [Saturday,June 05 2021]
கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு முன்பு பதிவு செய்யும் வகையில் கோவின் இணையத்தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த இணையத்தளத்தை இனிமேல் தமிழ் மொழியிலும் பயன்படுத்தலாம் என மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது.
முன்னதாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விரும்பும் 18-45 வயதிற்கு உட்பட்டவர்கள் கோவின் இணையத்தளத்திற்குச் சென்று பதிவு செய்துகொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த இணையத்தளம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே இயங்கியது.
இந்நிலையில் படிக்காத பாமர மக்கள் எப்படி ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதையடுத்து மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடா மற்றும் ஒரியா ஆகிய 9 மொழிகளில் இயங்கும் அளவிற்கு கோவின் இணையத்தளம் மேம்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த அறிவிப்பில் தமிழ் மொழி இடம்பெற வில்லை. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது கோவின் இணையத்தளத்தில் தமிழ் மொழியும் இணைக்கப்படும் என மத்திய அரசு தெளிவுப்படுத்தி இருக்கிறது. எனவே https://www.cowin.gov.in/ எனப்படும் இணையத்தளப் பகுதிக்கு சென்று தடுப்பூசியை செலுத்துவதற்கு பதிவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோர் அல்லது IOS இன் ஆப்ஸ்டோரில் இருக்கும் ஆரோக்கிய சேது (Aarogya Setu) ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உள்ள கோவின் டேப்பை கிள்க் செய்து தடுப்பூசியை பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.