தொடரும் தற்கொலைகள்: என்ன செய்ய வேண்டும் தயாரிப்பாளர்கள்
- IndiaGlitz, [Wednesday,November 22 2017]
தமிழ் சினிமாவில் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுப்பது என்பது புதிதல்ல. தமிழ் சினிமாவின் முதுகெலும்பே பைனான்சியர்தான் என்று சொல்லலாம். கோடிகள் புரளும் இந்த துறையில் கைக்காசு போட்டு படம் எடுப்பது என்பது அபூர்வ நிகழ்வுகளாகத்தான் உள்ளது. இந்த நிலையில் பல வருடங்களாக பைனான்சியர்களிடம் இருந்து பணம் வாங்கித்தான் தயாரிப்பாளர்கள் படமெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. இதற்கு என்ன காரணம்?
பிரபல தயாரிப்பாளர் ஜி.வி.யின் மரணம் தான் பிள்ளையார் சுழி. ரஜினி, கமல் படங்களை தயாரித்த இவர் பைனான்சியரின் நெருக்குதல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதும் திரையுலகமே அதிர்ந்தது. இவ்வளவிற்கும் இவர் மிகச்சரியாக வரி கட்டியவர் என்று பாராட்டுக்களையும் பெற்றவர். அவருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு?
ஜி.வி. முதல் அசோக்குமார் வரை தற்கொலைகளுக்கு என்ன காரணம். அடாவடியாக வசூல் செய்யும் பைனான்சியர்கள் முக்கிய காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், ஒருசில தயாரிப்பாளர்கள் திட்டமிடாமல் படங்களை தயாரிப்பது, அனுபவமற்ற இயக்குனர்களிடம் மாட்டிக் கொள்வது, பெரிய நடிகர்களிடம் கால்ஷீட் பெற சம்பளத்தை உயர்த்துவது போன்றவைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்துவிட கூடாது.
தயாரிப்பாளரிடம் இயக்குனர் படம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு பட்ஜெட்டை கூறுவது, பாதி படம் முடிந்த பின்னர் பட்ஜெட் தொகையை உயர்த்துவது, படம் முடியுந்தருவாயில் பட்ஜெட்டை உச்சத்துக்கு கொண்டு செல்வது போன்ற நிகழ்வுகள் தற்போது கோலிவுட்டில் அதிகமாக நடக்கின்றது. அதேபோல் குறித்த நாளில் படத்தை முடித்து தருவது இல்லை. இதனால் தயாரிப்பாளர் வாங்கிய கடன், வட்டியும் குட்டியும் போட்டி மீளாத்துயருக்கு தள்ளிவிடுகிறது. எனவே படம் எடுக்க வரும் இயக்குனர்களிடம் சரியான திட்டம் இல்லாமல் போவதுதான் இத்தகைய கொடூர மரணங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஒரே ஒரு படம் இயக்கிய ஒரு இளம் இயக்குனர் 41 நாட்களில் மிகச்சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்த நிலையில், அனுபவம் வாய்ந்த இயக்குனர்களால் முடியாதா? தொழிலின் மீது அக்கறையின்மையும், நம் பணமா? என்ற கவனக்குறையுமே இதற்கு முக்கிய காரணம். எனவே இனிமேலாவது தயாரிப்பாளர்கள் திருந்த வேண்டும். குறிப்பிட்ட பட்ஜெட், குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்கும் இயக்குனர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டும். முடிந்தால் இயக்குனரையே தயாரிப்பாளராகவும் சேர்த்து கொள்ளலாம். இனியொரு அசோக்குமார் நிலைமை யாருக்கும் வராமல் இருக்க திரைத்துறையினர் அனைவரும் ஒன்றுகூடி பேசி ஆரோக்கியமான நிலையை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமல்ல, சரியாக திட்டமிட்டு நடத்தும் எந்த தொழிலும் நஷ்டம் அடைந்ததாக சரித்திரம் இல்லை.