விஜய் தவறான பாதையில் செல்கிறார்: பிரபல இயக்குனர்
- IndiaGlitz, [Wednesday,September 18 2024]
நடிகர் விஜய் தவறான பாதையில் செல்வதாகவும் அதனால் வருத்தமாக இருப்பதாகவும் பிரபல இயக்குனர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று பிரதமர் மோடிக்கும், தந்தை பெரியாருக்கும் வாழ்த்து கூறியதோடு, பெரியாரின் நினைவு இடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து விஜய் அஞ்சலி செய்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஜய் அரசியல் வருகை குறித்து பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாகவும், குறிப்பாக தந்தை கேரக்டர் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு நன்றாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
மேலும் ’கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் அவர்கள் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது என்றும், இன்றைய தலைமுறையினர் இளவயது விஜயகாந்த்தை பார்த்திருக்க மாட்டார்கள்; அவர்களுக்கு ’கோட்’ ஒரு வாய்ப்பாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நான் ஏஐ மூலம் ஒரு கேரக்டரை உருவாக்குவேன் என்றால், சிவாஜி கணேசனை உருவாக்குவேன். இன்றைய தலைமுறையினருக்கு சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம் என்று கூறினார். மேலும், ’தேவர் மகன்’ போன்ற கேரக்டர்களில் நடிக்க இப்போது நடிகர்கள் இல்லை என்றும், எனவே சிவாஜி கணேசனை ரொம்பவே மிஸ் செய்கிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய் அரசியல் குறித்து மோகன் ஜி கூறியபோது, ‘இளைஞர்களுக்கு பிடித்த ஒரு அரசியல் தலைவர் தோன்றுவது நாட்டுக்கு நல்லது தான். ஆனால், அதே நேரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது, விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால், பாஜக ஆதரவாளர் என்று நினைத்து விடுவார்களோ என்று பயந்து தான் பலர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுவதில்லை. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது வேறு, பாஜக ஆதரவு நிலை எடுப்பது வேறு, இந்த இரண்டையும் புரிந்து கொண்டாலே அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு பயமின்றி வாழ்த்து சொல்வார்கள்’ என்றும் அவர் கூறினார்.