பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்
- IndiaGlitz, [Thursday,September 06 2018]
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.
கோவையை சேர்ந்த சுப்பையா, தேவரின் 'மாணவன்' என்ற படத்தில் நடித்தபோது சாண்டோ சின்னப்பாதேவர் அவரை வெள்ளை சுப்பையா என்ற பெயரில் அறிமுகம் செய்தார். அதுமுதல் அவரது பெயர் வெள்ளை சுப்பையா என்று மாறியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த வெள்ளை சுப்பையா, இளையராஜா, கங்கை அமரன் குடும்பத்தினர்களுக்கு நெருக்கமானவர். கங்கை அமரன் இயக்கிய 'கரகாட்டக்காரன்' படத்தில் வாழைப்பழ காமெடியில் இவரும் நடித்திருப்பார். அதேபோல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் இடம்பெற்ற 'மேகங்கருக்கையிலே' என்ற பாடலை பாடுபவராகவும் இவர் நடித்திருப்பார்.
நடிகர் வெள்ளை சுப்பையாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் கழுத்தில் கேன்சர் வந்ததால் அதுமுதல் அவர் கேன்சருக்கான சிகிச்சையை எடுத்து வந்தார். ஒருகட்டத்தில் சிகிச்சைக்கு பணமின்றி மாவட்ட ஆட்சி தலைவரிடம் உதவியையும் கோரினார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை பெற்ற வெள்ளை சுப்பையா, நேற்றிரவு சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவருக்கு திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.