தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,September 10 2018]
உலக திரையுலகில் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு தனி இடம் நிச்சயம் உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா என்ற அளவில் உலகமே நினைத்து கொண்டிருந்த நிலையில் தமிழ் சினிமாவுலகம் என்ற ஒன்று இருப்பதை இளம் இயக்குனர்கள் உலகிற்கு வெளிப்படுத்தினர். மேலும் உலக தரத்தில் தற்போது தமிழ் சினிமா தயாராகி வருவது மட்டுமின்றி தமிழ் சினிமாவிற்கு உலக அளவில் மார்க்கெட்டும் உள்ளது.
இந்த நிலையில் தமிழில் முதல் திரைப்படம் ஆர்.நடராஜ முதலியார் என்பவர் இயக்கிய 'கீச்சக வதம்' என்ற திரைப்படம் தான். மெளன மொழி திரைப்படமான இந்த படம் வெளியாகி 100 ஆண்டுகள் ஆனதை அடுத்து 'தமிழ் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று திரையுலகினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'தமிழக அரசு சார்பில் விரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாகவும், அதேபோல் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பி.யு.சின்னப்பா அவர்களுக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவித்தார். இந்த தகவல் திரையுலகினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.