சூப்பர் ஸ்டார் பெயரில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்: ரஜினிக்கு நன்றி கூறிய தொழிலதிபர்
- IndiaGlitz, [Saturday,August 28 2021]
சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டிய தமிழக தொழில் அதிபர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் தமிழகத்தை சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் என்பவர் ஃபிரஸ்டெஸ்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதும் இவர் ரஜினி படம் ரிலீசாகும் போதெல்லாம் தன்னுடைய நிறுவனத்தில் உள்ள அத்தனை ஊழியர்களுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மாத்ருபூதம் தனது நிறுவனத்தை அமெரிக்காவிற்கு மாற்றினார். அங்கு சென்ற மூன்று ஆண்டுகளில் இவருடைய நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்ததை அடுத்து பங்குச் சந்தையில் பங்குகள் விற்பனை மூலம் நிதி திரட்ட முடிவு செய்தார்
இதற்காக அவர் தனது மனசீக குருவான ரஜினிகாந்த் பெயரில் அதாவது ’சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரை தனது திட்டத்திற்கு வைத்தார். இந்த திட்டத்தில் அவருக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அவர் 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து தனது மானசீக குரு ரஜினி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் மீது உள்ள அன்பை வெளிப்படுத்த விரும்புவதாகவும், அவர் தான் தன்னுடைய ரோல்மாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சூப்பர் ஸ்டாரை உலகெங்கும் உள்ள பல லட்சம் ரசிகர்கள் போற்றிப் பாராட்டி வரும் நிலையில் எனக்கு ஒரு நல்ல ரோல் மாடலாக இருப்பவரின் பெயரை என்னுடைய பங்குச்சந்தை திட்டத்திற்கு வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி, நன்றி தலைவா! என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
சென்னையில் தொடங்கிய நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு ’சூப்பர் ஸ்டார்’ என்ற கோட்நேம் மூலம் மிகப்பெரிய நிதி திரட்டப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.