மீண்டும் பிரபலங்களை தாக்கும் கொரோனா: தமிழ் நடிகைக்கு பாதிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,June 21 2022]

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் தற்போது தினசரி பாதிப்பு தமிழகத்தில் கிட்டத்தட்ட 700 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் அலை, இரண்டாவது அலைபோல் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் சில பிரபலங்களையும் தாக்கி வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சோனியா காந்தி, கனிமொழி உள்பட ஒருசில அரசியல் பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது திரையுலக பிரபலங்களையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் நடிகை வேதிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா முதல், இரண்டாவது அலையின்போது எஸ்பிபி உள்பட பல பிரபலங்களை தமிழ் திரையுலகம் இழந்த நிலையில் தற்போது அனைவரும் தடுப்பூசி அளித்து பாதுகாப்புடன் இருந்தாலும் சிலரை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

இந்த நிலையில் நடிகை வேதிகா தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக தனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும் இதையடுத்து தான் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எனவே அனைத்து ரசிகர்களும் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். துரதிஷ்டவசமாக தனக்கு முதல்முறையாக கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தனக்கு அதிகமாக காய்ச்சல் அறிகுறியின் மூலம் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

எனவே எந்தவித அறிகுறிகளையும் தயவுசெய்து குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் உடல் வலி, அதிக காய்ச்சல் ஆகியவை கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு முறை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மீண்டும் அந்த நோய் ஏற்படாது என்று நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.