பாஜகவில் இருந்து திடீரென விலகிய தமிழ் நடிகை. அண்ணாமலை மீது சரமாரி புகார்!

  • IndiaGlitz, [Tuesday,January 03 2023]

கடந்த சில ஆண்டுகளில் பாஜகவில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் தமிழ் நடிகை ஒருவர் பாஜகவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார். இந்த நிலையில் தற்போது கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக பிரமுகர் ஒருவர் பெண் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததை அடுத்து காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவு செய்தார். அந்த பதிவு சர்ச்சைக்குரியதாக இருந்ததை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக அவரை ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்தார்.

இந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்றும் பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்றும் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நான் பாஜகவில் இருந்து விலக முடிவு எடுத்ததற்கு அண்ணாமலை தான் காரணம், அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இனிமேல் அண்ணாமலை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் அண்ணாமலை ஒரு மலிவான தரமான பொய்யர், தர்மத்திற்கு எதிரான தலைவர், அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை மற்றும் மரியாதை தராததால் விலகுகிறேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.