இதுக்கு பேரு ஜல்லிக்கட்டா? பேசாம நிறுத்திடுங்க: பிரபல நடிகர் பேட்டி!
- IndiaGlitz, [Wednesday,January 12 2022]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் அவற்றில் ஒரு கட்டுப்பாடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. தமிழக அரசின் இந்த நிபந்தனைக்கு பிரபல குணசித்திர நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் போட்டியை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இப்படி நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமலேயே இருக்கலாம்.
தற்போதைய அரசாங்கம் நல்ல அரசாங்கமாக இருக்கிறது. முதலமைச்சரும், அவருடன் இருக்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் முற்போக்காக இருக்கிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இப்படி அரசு நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜல்லிக்கட்டு என்பது திருவிழா.
ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆள்கள் இல்லாமல் காளை மாடுகளை அவிழ்த்துவிட மாட்டின் உரிமையாளர்களும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்நாடு அரசு தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி நடத்த வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்திவிடலாம்’ என வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.