அம்மாவின் இறப்பை உணர்ச்சியுடன் பதிவு செய்த தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் நடிகர் உதயா அவர்களின் தாயார் சமீபத்தில் காலமானார் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் உதயா தனது அம்மாவின் மறைவு குறித்து உணர்ச்சிகரமாக தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவை படிக்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வருவதாக அவருடைய பதிவின் கமெண்ட்ஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உணர்ச்சிமயமான பதிவு இதோ:
அம்மா என்றால் எல்லோருக்குமே தெய்வத்திற்கு சமமானவர் தான். எங்களுக்கு இன்னும் ஒரு படி மேல் என்றால் மிகையல்ல. யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவர் எங்கள் அம்மா. விஜய், தங்கை மற்றும் நான் ஆகிய மூவரையும் ஒரே மாதிரி தான் நடத்துவார், ஒரே மாதிரி தான்அன்பு செலுத்துவார். என்னை செந்தில் என்று அம்மா அன்புடன் அழைப்பார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட பிறகு நான் முதலில் சொன்னது அம்மாவிடம் தான். அப்பாவிற்கு நான் நடிப்பதில் விருப்பம் இல்லை, ஆனால் அம்மா அப்பாவை சம்மதிக்க வைத்து நான் நடிகனாவதற்கு காரணமாக இருந்தார்.
சினிமாவில் நான் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கடந்த 22 வருடங்களாக எனக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், ஊக்கமாகவும் இருந்தது எனது அம்மா தான். ’நீ நிச்சயம் ஒரு நாள் பெரிய அளவில் வருவாய்’ என்று அடிக்கடி கூறுவார். நான் பெரிய வெற்றியை அடைந்து விட வேண்டுமென்று அவர் போகாத கோவில் இல்லை, செய்யாத பிரார்த்தனை இல்லை.
தம்பி விஜய் போல சினிமாவின் மூலம் பொருளாதார ரீதியாக அம்மாவுக்கு பெரிதாக என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனாலும் அம்மா கை காட்டும் பெண்ணை திருமணம் செய்தேன். அவருக்கு நான் பணம் கொடுக்கவில்லையென்றாலும் கூட, பாசத்தை கொடுத்திருக்கிறேன், அன்பை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாவற்றையும் பல மடங்கு அதிகமாக அவர் எனக்கு தந்துள்ளார்.
அவரது உடல்நிலை இதற்கு முன்னர் குன்றிய போதெல்லாம் மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவர் குணமாகியுள்ளார். நீ வெற்றி பெறுவதை பார்க்காமல் நான் போய் விட மாட்டேன் என்று புன்னகையுடன் என்னிடம் கூறுவார். அவர் ஒரு போராளி. ஆனால் யாருமே எதிர்ப்பார்க்காத போது எங்களை எல்லாம் விட்டு விட்டு சென்று விட்டார்.
எனக்கு பாசத்தை பெரிதாக வெளிப்படுத்த தெரியாது என்ற போதிலும், அம்மா இறப்பதற்கு முன் சில நாட்களாக அவரிடம் நிறைய பேசினேன். அப்போதும் அவர் என்னை உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தார். அவர் போய் விட்டால் நான் அனாதை என்று நான் என்னுடைய உறவினர் ஒருவரிடம் சொன்னபோது கூட, அப்படியெல்லாம் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று அவர் நம்பிக்கையோடு கூறினார். ஆனால் இன்று அவர் எங்களுடன் இல்லை.
ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் இருந்தார். வீட்டுக்கு வரும் யாரும் உணவருந்தாமால் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த அன்பின் காரணமாகத்தான் அவர் இறந்தவுடன் ஏராளாமானோர் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட எங்கள் நால்வரையும் (அப்பா, நான், விஜய், தங்கை) இணைத்து தாங்கி பிடித்தது எங்கள் அம்மா தான். குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும், கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும், பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த உதாராணமாக திகழ்ந்தார்.
தம்பி விஜய்யும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அவரது விருப்பம். அதன் படியே ’தலைவா’ படத்தில் நான் நடித்தேன். அம்மாவிற்கு மிகச்சிறந்த சிகிச்சையை விஜய் உறுதி செய்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அம்மாவை உடனிருந்து பார்த்து கொண்டோம். ஆனாலும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
உடலால் அவர் எங்களுடன் இல்லை என்றாலும், உணர்வால் அவர் எங்களுக்குள் வாழ்கிறார். அவரது வாய்ஸ் மெசேஜ்களை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அவரது குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, இருக்கும். கடவுளாக இருந்து அம்மா எங்களை தொடர்ந்து வழி நடத்துவார் என்பது நிச்சயம். இந்த கடினமான நேரத்தில் எங்களுடன் இருந்து எங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் வணக்கங்கள்’ என்று உணர்ச்சியுடன் நடிகர் உதயா பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com