சத்யாவை கொன்றவனை ரயிலில் தள்ளிவிட்டு கொல்லுங்கள்: பிரபல நடிகர் டுவிட்!

  • IndiaGlitz, [Friday,October 14 2022]

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவன் சதீஷ் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சத்யாவை கொலை செய்தது போலவே சதீஷை ரயிலில் தள்ளிவிட்டு கொல்லுங்கள் என பிரபல நடிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக சதீஷ் என்ற கல்லூரி மாணவர் காதலித்து வந்ததாகவும் சதீஷ் காதலை சத்யா ஏற்காததால் ஆத்திரத்தில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து சதீஷ் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த நிலையில் சத்யாவின் மரணம் குறித்த செய்தி அறிந்த அவருடைய தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எந்த தவறும் செய்யாத சத்யாவின் குடும்பமே தற்போது உருக்குலைந்து போனதற்கு சதீஷ் தான் காரணம் என சமூக வலைதளங்களில் கோபமாக பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.