பிரபல நடிகை தமன்னா மீது வழக்கு… காரணம் இதுதான்…
- IndiaGlitz, [Thursday,October 28 2021]
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வரும் “மாஸ்டர் செஃப்“ எனும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கிவந்தார். இந்நிலையில் நடிகை தமன்னாவை அந்நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலக்கிவிட்டு வேறொருவரை தொகுப்பாளராக தயாரிப்பு நிறுவனம் நியமித்தது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை தமன்னா, தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகை தமன்னா கூறிய கருத்துகளை மறுத்து இருக்கிறது. அதோடு “மாஸ்டர் செஃப்“ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை தமன்னாவிற்கு ரூ.2 கோடி சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஜுன் 24 முதல் செப்டம்பர் இறுதிக்குள் இந்த நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி நடிகை தமன்னா 18 நாட்கள் ஷுட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நடிகை தமன்னா வேறுபணிகளுக்கு சென்று “மாஸ்டர் செஃப்“ நிகழ்ச்சிக்கான ஷுட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்ததால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இதுவரை நடிகை தமன்னாவிற்கு ரூ.1.50 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள நிகழ்ச்சிக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் விளக்கி இருக்கிறது. அதோடு நிகழ்ச்சி முடியவேயில்லை என்பதையும் தயாரிப்பு நிறுவனம் சுட்டிக் காட்டியிருக்கிறது.