யூரோ கோப்பை… 53 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை முத்தமிட்ட இத்தாலி!
- IndiaGlitz, [Monday,July 12 2021] Sports News
உலகப் பிரசித்திப்பெற்ற யூரோ கால்பந்து போட்டியில் 53 ஆண்டுகளுக்குப் பின் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வெற்றி மகுடத்தை சூடியிருக்கிறது இத்தாலி. இந்தப்போட்டியில் இறுதிவரை கடும் முயற்சிசெய்த இங்கிலாந்து தனது சொந்த மண்ணிலேயே தோற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்து ரசிகர்களின் உச்சப்பட்ச எதிர்பார்ப்பை பெற்ற யூரோ கால்பந்து 2020 போட்டி கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 11 நாடுகளில் உள்ள 11 பழமையான நகரங்களில் நடத்தப்பட்ட இந்த யூரோ கால்பந்து போட்டியில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டன. இந்த அணிகள் ஒரு பிரிவிற்கு 4 அணிகள் வீதம் 6 பிரிவுகளில் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் மோதிக்கொண்டன.
அதன் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் தகுதிப்பெற்ற நிலையில் லண்டன் நகரில் உள்ள வெம்பிளே மைதானத்தில் இறுதிப்போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி துவங்கிய 2 நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் Luke Shaw கோல் அடித்து இங்கிலாந்து கணக்கை துவங்கினார். பின்னர் 67 ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் Leonardo Bonucci பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
பின்னர் ஆட்டத்தின் இறுதிநேரம் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷுட் அவுட் வைக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் இத்தாலி வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கடந்த 1968 ஆம் ஆண்டிற்கு பிறகு இத்தாலி 2 ஆவது முறையாக வெற்றிக் கோப்பையை முத்தமிட்டு இருக்கிறது. கடந்த 1960 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் யூரோ கால்பந்து கோப்பையில் துவக்கத்தில் வெறும் 4 அணிகள் மட்டுமே விளையாடி வந்தன. ஆனால் இன்றைக்கு 24 அணிகள் இடம்பெற்ற உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடராக மாறியுள்ளது.
மேலும் யூரோ கால்பந்தின் 60 ஆவது ஆண்டு சிறப்புத் தொடர் போட்டியை முன்னிட்டு 2020 யூரோ கால்பந்து போட்டிகள் அனைத்தும் உலகின் மிகப்பெரிய நகரங்களில் நடத்தப்பட்டன. கொரோனா நேரத்திலும் பார்வையாளர்கள் புடைசூழ நடத்தப்பட்டதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டுவரும் 16 ஆவது யூரோ கால்பந்து போட்டியில் தற்போது இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.