ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி… இப்போதே துவங்கிவிட்ட திக்திக் நிமிடங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் நேட்டா படை விலகிச்சென்ற பின்பு, வெறும் 10 தினங்களில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலைகீழாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் அச்சுறுத்தல் இப்போதே துவங்கிவிட்டதாகப் பொதுமக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகள் விடுவிப்பு- ஆப்கானிஸ்தான் ஆட்சியைத் தாலிபான்கள் தக்கவைத்துள்ள நிலையில் புல்-இ-சர்கி மற்றும் பதம்பாக் ஆகிய 2 சிறைகளிலும் உள்ள கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தக் கைதிகளில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தப் பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வரும் 8 பெண் தீவிரவாதிகள் உட்பட 24 இந்தியர்களும் அடக்கம். இந்த 8 பெண்களும் கடந்த 2016 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேருவதற்காக பாகிஸ்தானுக்கு சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் சிரியாவில் நடைபெற்ற போரில் தங்களது கணவன்களை இழந்த இந்தப் பெண்கள் தற்போது விதவைகளாக ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் ஷரியா சட்டத்தின்படி அந்தப் பெண்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைத்தவிர காபூல் குருத்வாராவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 சீக்கியர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட அஹ்மது அகங்கார் என்பவரும் விடுவிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு அஹ்மதிடம் விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில் தற்போது தாலிபான்களால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடைசி இந்து அர்ச்சகர்- காபூலில் உள்ள ரட்டன் நாத் எனும் பகுதியில் இருக்கும் பழமையான இந்துக் கோவிலுக்கு அர்ச்சகராக இருந்துவரும் பண்டிதர் ராஜேஷ் குமார் அந்நாட்டைவிட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து உள்ளார். ஆப்கானில் இனி, மதச் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்குமா எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில் தாலிபான்கள் என்னை கொன்றாலும் பரவாயில்லை அதை என்னுடைய சேவையாகவே கருதிக் கொள்வேன் எனக் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
ஷரியா சட்டம்- இதற்குமுன்பு தாலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பொது இடங்களில் பெண்களை கல்லெறிந்து கொல்வது, கல்விக்கு அனுமதி மறுப்பது, வேலைக்குச் செல்ல அனுமதி மறுப்பது போன்ற பல்வேறு சட்டங்களை புகுத்தி இருந்தனர். தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி துவங்கவுள்ள நிலையில் பெண்களின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதும் பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ள தாலிபான்கள் பெண்களை அரசாங்கத்தில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இஸ்லாமிக் எமிரேட்ஸ் பெண்களை பலியாள் ஆக்க விரும்பவில்லை என்றும் ஷரியா சட்டத்தின்படி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும் தாலிபான்கள் பதற்றத்தை தணிக்கவே இப்படி கூறியிருப்பதாகக் கருத்து உலவுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments