இறுக்கமான ஆடை… இளம்பெண்ணை அடித்தே கொன்ற தாலிபான்கள்!
- IndiaGlitz, [Tuesday,August 10 2021]
இறுக்கமான ஆடை அணிந்த குற்றத்திற்காக தாலிபான்கள் கடுமையாகத் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை விலக்கிக் கொள்ளப்பட்டதில் இருந்து தாலிபான்களின் அச்சுறுத்தல் அங்கு அதிகரித்து இருக்கிறது. இதனால் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை தாலிபான்கள் தற்போது தங்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர். இவர்களை வீழ்த்தி அந்த இடங்களை மீண்டும் தன்வசம் கொண்டுவர ஆப்கானிஸ்தான் இராணுவம் கடுமையான போராடி வருகிறது.
இதற்கிடையே தாலிபான்கள் தங்கள்வசம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு, பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, ஒருவேளை சென்றால் கணவரின் துணையில்லாமல் போகக்கூடாது என்பதுபோன்ற கடும் விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளனர்.
அப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு பலக் எனும் மாகாணத்தில் உள்ள சமர்காந்த் எனும் கிராமத்தில் வசித்துவந்த 21 வயது இளம்பெண் நஸானின் என்பவர் இறுக்கமான உடையணிந்து வந்ததாகக் கூறி அவரை தாலிபான்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே அந்த இளம்பெண் உயிரிழந்து இருக்கிறார். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்கா, தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மூன்றுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவு எட்டப்பட்டது. இதனால் அமெரிக்கா பாதுகாப்பு படை ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக் கொள்ள சம்மதித்தது. அதேபோல தாலிபான்கள் தங்கள்வசம் உள்ள பகுதிகளில் பயங்கரவாதத்திற்கு துணைபோக மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது அமெரிக்க படை விலக்கிக் கொள்ளப்பட்டதில் இருந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டகாசம் அதிகரித்து பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல உலகத் தலைவர்கள் அச்சம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.