கால் தெரியும்படி செருப்பு அணியக்கூடாது? ஆப்கனில் மோசமாகும் பெண்கள் நிலை!
- IndiaGlitz, [Saturday,August 14 2021]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாக ஏராளமான பெண்கள், குழந்தைகள் தங்களது இருப்பிடத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆப்கனையும் தன்னுடைய பிடியில் கொண்டுவந்து விட வேண்டும் என்ற முனைப்பில் தாலிபான்கள் இருந்துவருகின்றனர். இதனால் பெண்கள் தற்போது வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போக வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2001 வாக்கில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் ஆட்சி செய்துவந்தனர். இந்த நாட்களில் ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த எந்தவொரு பெண்ணும் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப் படவில்லை. மேலும் படிப்பதற்கும் உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. ஒருவேளை குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றாலும் ஆண் துணையில்லாமல் வெளியே செல்லக்கூடாது. சந்தைக்குப் போனாலும் ஆண் துணை வேண்டும். இதுபோன்ற கடுமையான விதிமுறைகளை தாலிபான்கள் அமல்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆப்கானில் இருந்து அமெரிக்க நேட்டா படை விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் பெரும்பாலான ஆப்கன் தலைநகரம் தற்போது தாலிபான்கள் பிடியில் சிக்கிவிட்டது. இந்த நிலைமை நீடித்தால் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஒட்டுமொத்த ஆப்கனும் தாலிபான்கள் வசம் சென்றுவிடும் என்று அமெரிக்க உளவுப்படை தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இதனால் ஆப்கனில் வசித்துவரும் பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த 20 வருடங்களாக கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் அனுபவித்த சுதந்திரம் இனி என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தாலிபான்கள் வசம் உள்ள பகுதியொன்றில் கடந்த வாரம் இறுக்கமான ஆடை அணிந்த குற்றத்திற்காக இளம்பெண் ஒருவரை அடித்தே கொன்ற சம்பவம் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் கால் தெரியும்படி பெண்கள் சிலர் செருப்பு அணிந்ததற்காக தாலிபான்கள் அவர்களை அச்சுறுத்தியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுபோன்ற தகவலை அடுத்து ஆப்கனில் உள்ள பெண்களின் வளர்ச்சி மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போகும் நிலைமை ஏற்படும் என சமூகநல ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.