அதிகம்"நீராவி பிடித்தாலும்" கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும்....! எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்....!
- IndiaGlitz, [Thursday,May 27 2021]
அதிகமாக ஆவி பிடித்தாலும், கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனாவின் 2-ஆம் அலை மக்களை கடுமையாக தாக்கி, பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. இதற்குள்ளாகவே கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை உள்ளிட்ட தொற்றுக்கள் மக்களை தாக்கி உயிரை குடித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுக்களை தடுக்க மக்கள் நீராவி சிகிச்சை எடுத்து வருவது இக்காலகட்டத்தில், இயல்பான ஒன்றாக மாறிவருகிறது.
கோவிட் தொற்று ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவில் கட்டுப்பாடு இல்லாதபோது கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தொற்றிக்கொள்கிறது.கொரோனாவிலிருந்து குணமடைந்து, சிகிச்சை பெறும் குறிப்பிட்ட சில நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைபவர்களுக்கும், ஸ்டெராய்டு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும் இந்த குறைபாடு ஏற்படுகிறது. கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள், அதிக மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்கள் தீவிர சிகிச்சை எடுத்துவருவதால், கணையத்தில் பாதிப்பும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாக இருக்கும். இக்காரணங்களால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கருப்பு பூஞ்சை தொற்று இருந்தால், முகத்திலும், கண்களிலும் வலி ஏற்படும், கண்கள் சிவந்து காணப்படும். கண்கள் வீக்கமடைந்து, பார்வை இழப்பு ஏற்படும். மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், மூக்கில் நீர் வடிதல் அல்லது இரத்தம் வடிதல் உள்ளிட்ட அறிகுறிகள் உண்டாகும்.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணரை தீபக் ஹல்திப்பூர் இதுகுறித்து கூறியிருப்பதாவது,
கடந்த வருடம் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியபோது, கருப்பு பூஞ்சை பாதிப்பு அவ்வளவாக ஏற்படவில்லை. ஆனால் நடப்பாண்டில் கொரோனா உருமாற்றம் அடைந்து பக்கவிளைவை ஏற்படுத்துகிறது. இந்தக்காரணங்களால் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் இரட்டிப்பாக பரவி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நோயாளிகளிடம் கருப்பு பூஞ்சை எளிதில் பரவிவிடுகிறது.
கொரோனாவிற்கு தோன்றும் சளி, இருமல் போன்ற அறிகுறிகளை தடுக்க, மக்கள் நீராவி பிடிக்கும் முறையை கையாண்டு வருகிறார்கள். ஆனால் அதிகம் ஆவி பிடிப்பதினால், மூக்கில் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. காற்றில் கலந்துள்ள கருப்பு பூஞ்சை, அதிகம் ஆவி பிடிப்பவர்களை தாக்கும் போது, அவர்களுக்கு எளிதில் நோய் தொற்றிக்கொள்கிறது. காரணம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல், நோய் தடுப்புத்திறன் குறைந்துவிடுகிறது. மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமில்லாமல், வீட்டில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்நோய் பரவ அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் பூஞ்சை தொற்று அறிகுறிகள் இருந்தவுடனே மருத்துவரை அணுகுவது நல்லது என அறுவை சிகிச்சை வல்லுநர் தீபக் ஹல்திப்பூர் கூறுகிறார். இவர் கர்நாடகாவில் கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக, அதிக அறுவை சிகிச்சைகள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.