யூடியூபர் இர்பானுக்கு கருணை காட்ட வேண்டாம், நடவடிக்கை எடுங்கள்: பிரபல அரசியல் கட்சி தலைவர்..!
- IndiaGlitz, [Tuesday,May 28 2024]
பிரபல யூடியூபர் இர்பான் சமீபத்தில் தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில் இது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து தமிழக அரசின் மருத்துவத்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் அதன் பின்னர் இர்பான் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டதை அடுத்து நடவடிக்கை கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ள இர்பானுக்கு கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழக அரசு மீண்டும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது ஏற்கனவே எடுத்த முடிவின் படி உறுதியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் துபாய் சென்றிருந்த இர்பான் அங்குள்ள ஸ்கேன் சென்டரில் தனது மனைவிக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை ஒரு விழாவாக கொண்டாடி வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவால் தான் தற்போது அவர் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.