தாஜ்மஹால்- ராம்மஹால் என மாற்றப்பட வேண்டும்… பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை கருத்து!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

கடந்த 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த முகாலாய மன்னன் ஷாஜகான். இவர் தன்னுடைய காதல் மனைவியின் நினைவாக ஆக்ராவில் கங்கை நதிக்கரை ஓரமாக பல்வேறு தொழில் வல்லுநர்களை வைத்து தாஜ்மஹால் எனும் பிரம்மாண்டத்தை உருவாக்கியுள்ளார். தற்போது உலக அதிசயங்களில் ஒன்றாக இக்கட்டிடம் போற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல், வளாகத்திற்குள் இந்து பூஜை செய்ய முற்படுவது போன்ற சில விசித்திரமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க எம்எல்ஏவான சுரேந்திர சிங் என்பவர் இந்துக் கோவிலை இடித்துத்தான் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே தாஜ்மஹாலின் பெயரை மாற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இவரது கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எம்எல்ஏ சுரேந்திர சிங், “தாஜ்மஹாலை கட்டப்படுவதற்கு முன் அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்துள்ளது. அதனை இடித்துவிட்டுத்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தாஜ்மஹாலின் பெயர் விரைவில் ராம்மஹால் என்று பெயர் மாற்றப்படும். யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, சத்ரபதி சிவாஜியின் வம்சாவளி ஆட்சிபோல உள்ளது. சிவாஜியின் வம்சாவளியினர் உத்தரப் பிரதேசத்திற்கு வந்துள்ளனர்.

சாமர்த் குரு ராம்தாஸ், இந்தியாவுக்கு சிவாஜியைக் கொடுத்ததுபோல கோரக்நாத் யோகி, ஆதித்யநாத்தை உத்தரப் பிரதேசத்துக்கு கொடுத்துள்ளார் எனத் தெரிவித்து உள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முகலாய அரசர்கள் கட்டிய அத்தனை கட்டிடங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.