சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: உபி அரசுக்கு குவியும் கண்டனங்கள்
- IndiaGlitz, [Tuesday,October 03 2017]
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உலக மக்கள் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட தாஜ்மஹாலை சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து உத்தரபிரதேச அரசு நீக்கியுள்ளது. ஷாஜஹானின் காதல் நினைவு சின்னமாகிய இந்த தாஜ்மஹாலை இந்தியர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் பார்க்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். உபி அரசுக்கு சுற்றுலா பயணிகளால் வருவாயை கொட்டி தரும் தாஜ்மஹாலை சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் தாஜ்மஹாலுக்கு பதிலாக கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுரா மற்றும் இந்துக்களின் புனித இடமான காசி ஆகியவை சுற்றுலா பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
உபி அரசின் இந்த முடிவுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தாஜ்மஹாலை ஒரு மத கண்ணோட்டத்துடன் பார்க்காமல், அதை காதலின் சின்னமாக மட்டும் பார்க்க வேண்டும் என்றும், சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியது இந்தியாவுக்கே அவமானம் என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. கடும் எதிர்ப்பை அடுத்து மீண்டும் சுற்றுலா பட்டியலில் தாஜ்மஹாலை இணைக்க உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்