டீச்சரா நீங்கள்? விவசாயப் போராட்டத்தில் பதிலடி கொடுத்த பிரபலங்களுக்கு இளம் நடிகை கேள்வி!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

தமிழில் சில வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் முன்னணி நடிகை டாப்ஸி. அவர் தற்போது விவசாயப் போராட்டத்தைக் குறித்து தனது டிவிட்டரில் அதிரடி கருத்து ஒன்றை பகிர்ந்து கொண்டு உள்ளார். இந்தப் பதிவு பல பிரபல நட்சத்திரங்களை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில் அமைந்து இருப்பதால் பாலிவுட் வட்டாரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் 2 மாதங்களைக் கடந்து விவசாயிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு இடையே சில நேரங்களில் வன்முறை மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் போராட்ட களத்தை ஒட்டி தற்போது சுவர் அமைக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விவசாயப் போராட்டம் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்று இருப்பதால் நேற்று பிரபல ஹாலிவுட் பாடகி ரிஹானா நாம் ஏன் இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை பற்றி பேசவில்லை? என டிவிட் செய்து இருந்தார்.

இந்த டிவிட்டை அடுத்து பருவநிலை குறித்து உலகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் சிறுமி கிரெட்டா துன்பெர்க், பார்ன் நடிகை கலிபா போன்றோர் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தனர். இதையொட்டி பல விவாதங்கள் தற்போது சூடு பிடிக்க தொடங்கி விட்டன. அந்த வகையில் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்களை இந்தியர்களே தீர்த்துக் கொள்ளுவோம், இதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் தலையீடு தேவையில்லை என்பது போன்று சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் அக்சய் குமார் போன்றோர் பாடகி ரிஹானாவிற்கு பதிலடி கொடுத்து இருந்தனர்.

அதோடு வெளியுறவுத் துறை தொடர்பான விவகாரங்களில் பிரபலங்கள் கருத்துப் பதிவிடும்போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று மத்திய அரசும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிகழ்வுகளை அடுத்து டாப்ஸி தற்போது தனது டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில், “ஒரு டிவிட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.