ஆச்சர்யப்பட வைக்கும் டி20 உலகக் கோப்பையின் பரிசுத்தொகை!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி சிறப்பு “குரூப் பி“ பிரிவில் இடம்பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 உலகக்கோப்பை தொடரை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதுவரை 6 தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது 7 ஆவது தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), வெஸ்ட் இண்டீஸ் (2012), இலங்கை (2014), வெஸ்ட் இண்டீஸ் (2016) ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையைத் தட்டிச்சென்றுள்ளது.

தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முனைப்பு காட்டிவருகிறது. இதற்காக பிசிசிஐ மகேந்திர சிங் தோனியை மென்டராக நியமித்துள்ளது. இந்தப் பதவியை அவர் சேவை அடிப்படையிலேயே செய்கிறார் என்பதையும் பிசிசிஐ தெளிவுப்படுத்தி இருந்தது. அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மற்றும் கேப்டனாக விராட் கோலி செயல்படுகின்றனர்.

பரிசுத்தொகை- டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதில் இரண்டாம் இடம்பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவும் இரண்டு அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.