டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா காரணமாக யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டு உள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்தியக் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிசிசிஐ தோனியை ஆலோசகராக அறிவித்து இருப்பது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணி வீரரர்கள்- விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமா, முகமது ஷமி

மாற்று வீரர்கள்- ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார்.

இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவர் விளையாடி இருந்தார். ஆனால் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதும் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல நட்சத்திர வீரர் ஷிகர் தவானுக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.