அதிமுக, திமுகவுக்கு மாற்று அணி: டி.ராஜேந்தர் அறிவிப்பு
- IndiaGlitz, [Sunday,March 17 2019]
தேர்தல் நேரம் என்றாலே லட்டர்பேட் கட்சிகள் கூட சுறுசுறுப்பாக இயங்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு, அமமுகவின் வேட்பாளர் அறிவிப்பு ஆகியவை இன்று காலை வெளியானது. இன்று மாலை திமுக வேட்பாளர்களை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை புதுப்பித்த டி.ராஜேந்தர், தனது கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பம் பெற்றார். டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட போகிறதாம்.
இந்த நிலையில் விருப்பமனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், 'பெரிய அரசியல் கட்சிகள் தனக்கு சீட் தருவதாக கூறியதாகவும், ஆனால் தனக்கு கொள்கை மட்டுமே முக்கியம் என்பதால் தனித்து போட்டியிடுவதாகவும் கூறினார். மேலும் டிடிவி தினகரன், கமல்ஹாசன் நிற்பது போல் தானும் தனியாக நிற்பதற்கு முடிவெடுத்து விட்டதாகவும், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது இயக்கம், கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம் என்றும் டி.ராஜேந்தர் தனது பாணியில் கூறினார்.
மேலும் முன்பு நான் சத்திரியன்; இப்போது நான் விவேகமான சாணக்கியன்; யோசித்துதான் முடிவு எடுப்பேன். இன்றைய அரசியலில் அறிவாளி, உழைப்பாளி, போராளி என நினைத்தால் ஏமாளியாகி விடுவார்கள். ஒரு பெரிய கட்சி அவர்களது சின்னத்தில் நிற்க கூறியதால், அதை ஏற்க மறுத்து விட்டேன் என்று டி.ராஜேந்தர் கூறினார்.